2019 நாடாளுமன்ற தேர்தல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு இடம் ஒதுக்கீடு

2019 நாடாளுமன்ற தேர்தல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு இடம் ஒதுக்கீடு

2019 நாடாளுமன்ற தேர்தல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு இடம் ஒதுக்கீடு
இன்று 22.02.2019 சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களும் தொகுதிஉடன்பாடு குறித்து கலந்து பேசியதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தமிழகத்தில் 1 (ஒன்று) நாடாளுமன்ற தொகுதியை பங்கீட்டு கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
 
இந்த பேச்சு வார்த்தையின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவர் தளபதி மௌலானா ஏ. ஷபிகுர் ரஹ்மான், மாநில செயலாளர் எச். அப்துல் பாசித் ஆகியோரும் திமுக பொருளாளர் துரைமுருகன், கழக துணை பொதுச்செயலாளர் இ. பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற செய்த திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பேச்சு வார்த்தையில் எங்கள் கோரிக்கையையும் பரிசீலனை செய்தனர்.
 
புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 40 தொகுதிகளின் வெற்றிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும் என்று தெரிவித்தோம். நாங்கள் முன்பு நின்று வெற்றி பெற்ற தொகுதிகள், போட்டியிட்ட தொகுதிகள் பற்றி தெரிவித்தோம். கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் ஒரு தொகுதியை மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள் என திமுக  தொகுதி உடன்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு தொகுதியை ஒதுக்கி தந்த மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதோடு துரைமுருகன் தலைமையிலான தொகுதி பேச்சுவார்த்தை குழுவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். திமுக உடனான அடுத்த கட்ட பேச்சு வார்த்தையின் முடிவில் நாங்கள் போட்டியிடும் தொகுதி முடிவு செய்து அறிவிக்கப்படும்.எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வழங்கியிருக்கக்கூடிய ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம்.
 
அதிமுக அணியில் பா.ஜ.க.இடம் பெற்றிருப்பதால் சிறுபான்மை முஸ்லிம் மட்டுமின்றி அனைத்து சிறுபான்மை மக்களும் எதிர்த்து வாக்களிப்பார்கள். சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி பா.ஜ.க. , அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் காந்திய வழியில் செல்லவில்லை. கோட்சோ வழியில் செல்கிறார்கள்.  அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. இணைந்தது மூலம் இவர்களின் தோல்வி உறுதியாக்கப்பட்டுவிட்டது. பா.ஜ.க. அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வாக்களிக்க கூடாது என்ற நிலையை அவர்களே உருவாக்கி விட்டார்கள்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறினார்.
பேட்டியின் போது மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், வடசென்னை மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவர் பழவேற்காடு அன்சாரி, தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், மாநில பொருளாளர் லால்பேட்டை ஏ.எஸ். அஹமது, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.எம். நிஜாம், செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
தங்கள் அன்புள்ள
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்