முக்கிய செய்தி

சிவகங்கை திருமண விழாவில் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

சிவகங்கை திருமண விழாவில் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உலகத்தின் கவனத்தை ஈர்க்கவே நாம் போராடினோம் அது நடந்திருக்கிறது
இவர்களால்தான் கொரோனா வைரஸ் பரவியது என்ற அவப்பெயர் நம் சமுதாயத்திற்கு ஏற்படாதிருக்க
ஷாஹின்பாக் வழியில் நடத்தப்படும் போராட்டங்கள் தற்போது தவிர்க்கப்பட வேண்டும்
சிவகங்கை திருமண விழாவில் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

சிவகங்கை, மார்ச். 16-
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உலகத்தின் கவனத்தை ஈர்க்கவே நாம் போராடினோம் அது நடந்திருக்கிறது. இவர் களால்தான் கொரோனா வைரஸ் பரவியது என்ற அவப்பெயர் நம் சமுதாயத்திற்கு ஏற்படாதிருக்க ஷாஹின்பாக் வழியில் நடத்தப்படும் போராட் டங்கள் தற்போது தவிர்க்கப்பட வேண்டும் என்று
சிவகங்கை திருமண விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிவகங்கை மாவட்ட தலைவர் ஹைதர் அலி அம்பல இல்லத் திருமண விழா திருப்பத்தூரில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசிய உரையின் சுருக்கம் வருமாறு:-

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயர் போற்றித் துவக்குகிறேன்.

மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிற இந்தத் தருணத்தில் ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்போது கொரோனா வைரஸ் நோய் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது மேலும் பரவாமல் தவிர்ப்பதற்காக மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், அரபு நாடுகளில் பள்ளிவாசல்களில் நடைபெறும் ஐவேளைத் தொழு கையைக் கூட மக்கள் கூடாத அளவில் தவிர்த்திரு க்கிறார்கள். இப்படியிருக்க, டில்லி ஷாஹின்பாக் போராட்ட முன்மாதிரியின்படி பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் ஆண்களும், பெண்களும் கூட்டங்கூட்டமாக அமர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதை மட்டும் இப்போது நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இதை நான் சொல்வதற்குக் காரணம், மக்கள் கூடினால்தான் இந்த கொரோனா வைரஸ் நோய் எளிதில் பரவும் என்ற அடிப்படையில் உலகம் முழுக்க பயத்துடன் கூடிய தவிர்ப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண் டிருக்க, மறுபுறம் நாம் கூட்டங் கூட்டமாக போராட்டம் என்ற பெயரில் அமர்ந்து கொண்டிருந்தால், ""அதனால்தான் கொரோனா வைரஸ் பரவியது"""" என்ற பழிச்சொல் நமக்கு வந்துவிடும் சூழல் இருக்கிறது.

இந்தக் கொடுஞ்சட்டத்தை எதிர்த்து அரசியல் ரீதியாக நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும், எல்லாவற் றுக்கும் மேலாக நீதிமன்றத்திலும் நாம் வலியுறுத்தி, அதனடிப் படையிலான நடவடிக் கைகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறோம். இவற்றோடு, இன்று வரை நம் சமுதாயம் வெளிப்படுத்திய எதிர்ப் புணர்வை இந்தியா மட்டுமின்றி இன்று உலகமே நன்றாகப் புரிந்து கொண் டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையே புரிந்து கொண்டு விட்டது. உலகின் கவனத்தை ஈர்க்கவே நாம் கூடினோம். அது நடந்திருக்கிறது.

இப்படியிருக்க, இனியும் கூட்டங்கூட்டமாக அமர்ந்து கொண்டிருந்து, அதன் காரணமாக ""இவர்களால்தான் கொரோனா வைரஸ் பரவியது"""" என்ற அவப்பெயர் நம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுவிடாதிருக்க - உலமாப் பெருமக்கள், ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், இந்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் சகோதர - சகோதரியரும் சிந்தையில் ஏற்றி, அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்று இந்த மேடையைப் பயன்படுத்தி உங்கள் அனைவரையும் மெத்தப் பணிவோடு வேண்டி, விடைபெறுகிறேன், நன்றி.
இவ்வாறு பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் பேசினார்.


 பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன்