முக்கிய செய்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இ.யூ.முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து மகஜர்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இ.யூ.முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து மகஜர்
அயோத்தி தீர்ப்பு, கஷ்மீர் விவகாரம் போன்ற பிரச்சினைகள் உருவெடுத்துள்ள நிலையில்
நாட்டை அழிவுப் பாதையிலிருந்து பாதுகாக்க
காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இ.யூ.முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து மகஜர்

புதுடெல்லி, நவம் 21-
அயோத்தி தீர்ப்பு, கஷ்மீர் விவகாரம் போன்ற பிரச்சினைகள் உருவெடுத்துள்ள நிலையில் நாட்டை அழிவுப் பாதையிலிருந்து பாதுகாக்க காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேற்று (20.11.2019) நேரில் சந்தித்து மகஜர் அளித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தேசிய பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி, அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான இ.டி. முஹம்மது பஷீர், பாராளுமன்ற மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ்கனி மற்றும் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் ஆகியோர் அடங்கிய ஓர் உயர்மட்ட குழு அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை நேற்று (20.11.2019) டெல்லியில் நேரில் சந்தித்து நாட்டில் தற்போது உருவாகியுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

அப்போது கீழ்க்கண்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

நலிவடைந்த பிரிவினரை ஒடுக்குதல்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் போன்ற அடித்தட்டு மக்களை ஒடுக்கும் தங்களது நோக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். மேலும் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் பரப்பி வருகின்றனர்.

பிற்பட்ட வகுப்பினரை குறிப்பாக சிறுபான்மையினரை அவர்கள் புறக்கணித்து வருகின்றனர். மேலும் அந்த சமூகத்தினரை இந்த நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக கருதி வருகின்றனர்.

தேசிய குடியுரிமை மசோதா

பாராளுமன்றத்தில் அவர்களுக்கு கிடைத்த அசூர பலத்தை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த மசோதா ஆகியவற்றை சிறுபான்மையினர்களை மட்டும் தாக்கும் ஆயுதங்களாக பயன்படுத்துகின்றனர்.

பா.ஜ.க. தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இவற்றை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த குடியுரிமை திருத்த மசோதா மூலம் முஸ்லிம்கள் நீங்கலாக அனைத்து சமூகத்தை சேர்ந்த அகதிகள் அல்லது குடி பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவுள்ளது.

முத்தலாக் மசோதா

பா.ஜ.க. அரசால் இதுவரை கொண்டுவரப்பட்ட மசோதாக்களில் அதாவது முத்தலாக் மசோதா, மக்களின் அடிப்படை உரிமைகளை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது முஸ்லிம்களின் தனிநபர் சட்டத்தில் தலையிடும் நடவடிக்கை. இது அரசியல் அமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரானது. 

அயோத்தியா தீர்ப்பு

மாண்புமிகு உச்சநீதிமன்றம் அளித்துள்ள அயோத்தியா தீர்ப்பை அனைவரும் மதிக்கின்றனர். சிறுபான்மையினரின் கோரிக்கை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் இது ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தீர்ப்பு பல்வேறு பிரச்சினைகளுக்கு எந்தவித தெளிவையும் அளிக்கவில்லை. இந்த சமுதாய மக்களின் மனதில் தாங்கள் புறக்கணிப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் உருவாகி மிகவும் பதற்றத்தில் உள்ளனர். இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முன்வந்துள்ளனர்.

முஸ்லிம் சமுதாய அமைப்புகள் இது தொடர்பாக விரிவான கலந்தாலோசனைகளை நடத்தி இந்த தீர்ப்பு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கஷ்மீர் பிரச்சினை

கஷ்மீர் மக்களுக்கு கடும் மன உளைச்சல் உருவாக்கப் பட்டுள்ளது. அங்கு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. அவர்கள் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள வாழ்வாதாரத்திற்கான சுதந்திரம் கஷ்மிர் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மாண்புகள் அழிக்கப்பட்டுள்ளன. 
அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகளின் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இன்று வரை பல மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மக்களை சந்திப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். கஷ்மீர் பிராந்தியம் முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கும் உட்படுத்தப் பட்டுள்ளனர்.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் நாடு மிகவும் மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது. இந்த பொருளாதார பிரச்சினையால் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பான்மையானவர்கள் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர்கள், அதாவது குறிப்பாக தலித்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைந்த முயற்சி

மதவாத சக்திகளின் ஆபத்தை விளைவிக்கும் கொடும் பிடியிலிருந்து நாட்டை பாதுகாப்பது என்ற பொதுவான கொள்கையை உருவாக்கி ஒரு குடையின் கீழ் மதச்சார்பற்ற சக்திகளை  இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் மத்தியில் மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கான கொள்கையையும் வடிவமைக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது நாட்டிற்கு கன்னியத்தை அளிக்கக் கூடியது.
மதவாதங்கள் அடிப்படையில் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரங்களில் காங்கிரஸ் கூடுதல் கவனம் செலுத்தி, ‘நாட்டை அழிவிலிருந்து பாதுகாத்தல்’ என்ற முழக்கத்துடன் தேசிய அளவிலான ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கு மதச்சார்பற்ற சக்திகளை திரட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தியிடம் அளிக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.