முக்கிய செய்தி

கேரளாவில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்

கேரளாவில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்
ஜம்மு - கஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்
லவ் ஜிஹாத் தடுப்பு என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்தும் வகையில்
உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும்
கேரளாவில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்
கோழிக்கோடு, ஜன 03-
ஜம்மு - கஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்; லவ் ஜிஹாத் தடுப்பு என்ற போர்வையில் முஸ்லிம் களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் கேரளாவில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் 02-01-2021 அன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் கேரள மாநிலம் கோழிக்கோடு ஈஸ்ட் அவென்யூ ஹோட்டலில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில்  நடைபெற்றது.
தேசிய அரசியல் ஆலோசனைக்குழு சேர்மனும், கேரள மாநில தலைவருமான பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் கூட்டத்தை துவக்கி வைத்தார்.
தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி. வரவேற்புரையாற்றினார்.
தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது  பஷீர் எம்.பி. கூட்ட நடவடிக்கை மற்றும் தேசிய அளவிலான இயக்கப்பணிகள் குறித்து பேசினார்.
தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வகாப் எம்.பி நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துரையாற்றியோர் விவரம் வருமாறு:-
தேசிய துணைத்தலை வர்கள்  எம்.பி. அப்துஸ் ஸமது சமதானி, உ.பி. வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசிய செயலாளர்கள் டெல்லி குர்ரம் அனிஸ் உமர், கர்நாடாகா தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா, பீகார் எஸ். நயீம் அக்தர், தமிழ்நாடு எச். அப்துல் பாசித், தேசிய துணைச்செயலாளர் கேரளா யூனுஸ் குஞ்சு மற்றும் சிறப்பு அழைப்பாளர்களான கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத் சாகிப், கேரள மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள மாநில எதிர்க்கட்சி துணைத்தலைவர் டாக்டர் எம்.கே. முனீர், தமிழ்நாடு மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவர் கே. நவாஸ்கனி எம்.பி., மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், வெஸ்ட்பெங்கால் மாநில தலைவர் ஜபருல்லாஹ் முல்லா, வெஸ்ட்பெங்கால் பொதுச் செயலாளர் முஹம்மது அபுல்ஹஸன் முல்லா,  எம்.எஸ்.எப். தேசிய தலைவர் டி.பி. அஷ்ரப் அலி, தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், முஸ்லிம் யூத் லீக் தேசிய பொதுச்செயலாளர் சி.கே. ஜுபைர், தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் பைசல் பாபு, கேரள மாநில முஸ்லிம் யூத் லீக் தலைவர் செய்யது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள மாநில முஸ்லிம் யூத் லீக் பொதுச்செயலாளர் பிn.க பிரோஸ், எஸ்.டி.யூ. தேசிய தலைவர் வழக்கறிஞர் எம். ரஹ்மத்துல்லா, அகில இந்திய கே.எம்.சி.சி. தலைவர் எம்.கே. நவ்ஷாத், தேசிய பொதுச்செயலாளர் அபூபக்கர் சம்சுதீன்,  இந்திய யூனியன் விமன்ஸ் லீக் தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பி.கே. நூர்பினா ரஷித், வழக்கறிஞர் அணி தேசிய அமைப்புக்குழு உறுப்பினர்கள் வழக்கறி ஞர்கள் முஹம்மது ஷா, அபூ சித்தீக் ஆகியோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்த அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி தந்துள்ள மேதைகள் இந்தியாவை ‘மாநிலங்களின் ஒன்றியம்‘ என்றே வர்ணித் துள்ளார்கள். இந்த வர்ணனை மூலம் இந்தியா ஒரு வலிமைமிக்க கூட்டாட்சி அமைப்பாக திகழும் என்பதையே குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் மத்தியில் ஆளும் அரசு வகுத்துள்ள கொள்கைகள், நிறைவேற்றிய சட்டங்கள், வெளியிடும் சீர்த்திருத்தங்கள் போன்றவற்றை நோக்கும் போது பா.ஜ.க. அரசு தனது மறைமுக திட்டத்தை ரகசியமான முறையில் நடைமுறைக்கு கொண்டு வந்து இந்தியாவில் இந்துத்துவ கொள்கையில் இயங்கும் வகையில் ஒரு பாசிச மேலாண்மைமிக்க அரசியல் சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருவதாகவே தோற்றம் அளித்து வருகின்றது.
எனவே நாட்டில் பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வரும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் வகையில், அரசமைப்பு சட்டங்களின் மாண்பையும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்த வும் விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று பட்டு எதிர்க்க வேண்டும்.
இந்தியாவை  ஒரு வலுவான தனித்தன்மை வாய்ந்த கூட்டாட்சி தத்துவமிக்க நாடாக உருவாக்க நிதி, நிர்வாகம் மற்றும் அரசியலில் சுயாட்சி ஏற்படும் வகையில் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் தேசிய அளவில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
2.  ஜம்மு - கஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து
ஜம்மு - கஷ்மீருக்கான யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிக மானதுதான் என்றும், மாநில அந்தஸ்து விரைவில் வழங்கப்படும் என்றும் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரிவு 370 மற்றும் 35ஏயை ரத்து செய்த போது மத்திய பா.ஜ.க. அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அண்மையில் ஜம்மு - கஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. இது ஜம்மு - கஷ்மீர் மக்கள் ஜனநாயக பாரம்பரியத்தை விரும்புகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
மேலும் பிரிவினை வாத கொள்கை மற்றும் மாநிலத்தில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்த மக்கள் அரசியல் ரீதியாகவும், மனோ தத்துவ ரீதியாகவும் எதிர்க்கின்றனர் என்பதை காட்டுக்கின்றது.
எனவே தற்போதுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு ஜம்மு -கஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டு மென்று மத்திய அரசை இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3.  சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
முஸ்லிம் மற்றும் இந்து சமுதாயத்தை சேர்ந்த இளை ஞர்கள் தவறான முறையில் வழி நடத்தப்பட்டு அதன் விளைவாக மஸ்ஜிதுகளில் அத்துமீறி நுழைந்து பூஜைகளை நடத்துவதாகவும் மற்றும் கோவில்களில் தொழுகை நடத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் சம்பவங்கள் ஆங்காங்கே சில இடங்களில் நடைபெற்றதாக வட இந்திய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சமூகத்தில் குழப்பம், கெட்ட எண்ணம், கொந் தளிப்பை உண்டாக்கக்கூடிய எண்ணத்தில் இந்த சமூக விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர். நாட்டில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை விரும்பும் மக்களுக்கு இது மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த சமூக விரோதிகளை துரிதமாக அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து இந்த மோசமான நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்த கூட்டம் மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
4. உள்ளாட்சி தேர்தல்களை கட்டாயமாக்கும் வகையில்
புதிய சட்டத்தை உருவாக்குதல்
அடித்தளத்திலிருந்தே உண்மையான ஜனநாயக மதிப்புகள், கலாச்சார மற்றும் பாரம்பரியங்களை நிலை நிறுத்தும் உன்னத நோக்கத்துடன் ராஜீவ்காந்தி ஆட்சி காலத்தில்  பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் நாகர்பாளிக் சட்டம் பிரகடனப் படுத்தப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சட்டங்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் மிகக் குறைந்த அளவிலே முக்கியத்துவம் அளிக்கின்றன.
உள்ளாட்சி தேர்தல் களை நடத்துவதை மாநிலங்கள் வேண்டு மென்றே கைவிட்டுள்ளன. நீதிமன்றங்களில் ஆர்வமுள்ள நபர்கள் பொது நல வழக்கு தொடரும் போது உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு ஆதரவாக தீர்ப்புகள் வெளிவருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை மாநில அரசுகள் செயல்படுத்துவதில்லை. இது நீதிமன்ற அவமதிப்புக் குள்ளாகும் என்பது பற்றி கவலைப்படுவதுமில்லை.
உள்ளாட்சி தேர்தல்கள் வெவ்வேறு காலங்களில் நடத்துவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் மனங்களில் சில மாநிலங்கள் குழப்பங்களை விளைவிக்கின்றன. உதாரண மாக கிராமப் பஞ்சாயத்து தேர்தல்கள் ஆண்டு தொடக்கத்திலும், ஜில்லா பஞ்சாயத்து தேர்தல்கள் ஆண்டு இறுதியிலும், நகராட்சி வார்டு தேர்தல்கள் அடுத்த ஆண்டிலும் மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் அடுத்த ஆண்டும் நடத்தப்படுகின்றன. இது ஒரு அரசியல் சித்து விளையாட்டு. மக்களை உள்ளாட்சி தேர்தல்களில் முக்கியத்துவம் குறித்து மறக்கடிக்கச் செய்கிறது இந்த நடவடிக்கை.
சில மாநிலங்களில் மாநில நிர்வாகங்களுக்கும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் இடையில் சச்சரவுகள் ஏற் பட்டு நீதிமன்றங்களில் வழக்கு களாக நடைபெறு கின்றன.
எனவே உள்ளாட்சி தேர்தல்களை கண்டிப்பாக நடத்தும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்து கிறது.
இதற்காக மாநில தேர்தல் ஆணையங்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் பாராளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலை உரிய காலக்கட்டத்தில் நடத்துவதைப் போன்று உள்ளாட்சி தேர்தல்களையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் நடத்தப்பட வேண்டும்.
5. இலங்கை அதிபருக்கு பணிவான வேண்டுகோள்
உலகளவில் பரவி வரும் கோவிட்- 19 தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வது வழக்கம். இது உலகளவில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. உலகின் அனைத்து நாடுகளிலும் இதற்கு சட்டப்பூர்வ மான அனுமதி உள்ளது. ஆனால் துரதிஷ்ட வசமாக இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்க வேண்டும் என்று சட்ட மாக்கி யிருப்பது உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம் களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம் மற்றும் வேதனையை ஏற்படுத்தி யுள்ளது.
இலங்கையில் வாழும் 10 சதவீத முஸ்லிம் குடிமக்களின் மத நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கும்படி இந்த கூட்டம் இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் அடிப்படை உரிமைகளை பயன்படுத்தும் வகையில் முஸ்லிம் ஜனாஸாக் களை அடக்கம் செய்வதற்கு தடையாக உள்ள சட்ட நடவ டிக்கையை ரத்து செய்யும்படி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவை இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது. இதன் மூலம் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அமைதியாகவும், மதநல்லிணக்கதுடனும், நிம்மதியாகவும் வாழ முடியும்.
6. அனைத்து அஸ்ஸாம் மக்களையும் இந்தியாவின் சட்டப்பூர்வ குடிமக்களாக அறிவிக்க வேண்டும்
கிழக்கு மாநிலங்களில் மீண்டும் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் அஸ்ஸா மில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளதாக அரசிய லமைப்புகள் மற்றும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். சந்தேகத்திற்குரிய குடிமக்கள் தொடர்பான, தவறான அநீதியான மற்றும் பாரபட்சமான கணக்கெடுப்பு மூலம் அஸ்ஸாமில் 19 லட்சம் பேரின் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத அநீதி.
அஸ்ஸாம் மக்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்த்து இந்த மாநிலத்தலுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறையை ரத்து செய்து அஸ்ஸாமில் உள்ள 33 லட்சம் பேரை இந்தியாவின் உண்மையான சட்டப்பூர்வ குடிமக்களாக அறிவிக்க வேண்டும்.
7.  உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்
இட்டுக்கட்டப்பட்ட கற்பனையான லவ் ஜிஹாத்தை காரணம் காட்டி சட்ட விரோத மத மாற்றத்தை தடை செய்யும் சட்டத்தை பா.ஜ.க. ஆளும் உத்திரபிரதேசம் மாநிலம் இந்த ஆண்டு நவம்பர் 28ந் தேதி உருவாக்கியது. இதே போன்றதொரு சட்டம் மத்தியப் பிரதேசத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி உத்தர காண்ட், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ஹரியானா மற்றும் அஸ்ஸாம் போன்ற இதர பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் இந்த சட்டத்தை கொண்டு வருவதற் கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீப காலமாக இந்துத்துவ அமைப்புகள் கலப்பு திருமணங்கள் குறித்து தவறான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அதாவது இந்தியாவில் இஸ்லாத்தை பரப்பும் வகையில் இந்துப் பெண்களை மதமாற்றம் செய்வதற்காக முஸ்லிம்கள் சதித்திட்டம் செய்வதாகவும், தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த மதவாத விஷம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் காவல்துறையிலும் பரப்பப் பட்டுள்ளது.
முஸ்லிம் இளைஞர்களை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் எந்த வித உரிய காரணமுமின்றி கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து தவறான காரணங்களின் அடிப் படையில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
தற்போது சில மாநிலங்களில் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளுடன் காஜிகளும் தேவையில்லாமல் விசாரிக்கப்பட்டு காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த சம்பவங்கள் அவர்கள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. காவல் துறையினரின் இந்த தேவை யற்ற விசாரணைக்கு பயந்து முஸ்லிம் குடும்பத்தினர் தங்களது இருப்பிடத்தை விட்டுவிட்டு தூரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து விடுகின்றனர்.
தற்போது இயற்றப் பட்டுள்ள புதிய சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானது என்றும், அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசமைப்பின் சட்ட நிபுணர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். ஏனென்றால் இந்த சட்டங்கள் அரசமைப்பு சட்டத்தின் உயிர் மூச்சு மற்றும் நோக்கத்திற்கு மிகப்பெரிய குந்தகத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்தும்.
மாநிலத்தில் மதவாத விஷத்தை பரப்பும் புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று உத்திர பிரதேச முதல்வரை ஓய்வுபெற்ற  பிரபல அதிகாரிகள் 104 பேர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கலப்பு திருமணங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுகளை உத்திரபிரதேச பா.ஜ.க. அரசு மதிப்பதில்லை என்றும் அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்து சமுதா யத்தைச் சேர்ந்த மக்களும் அமைதியுடனும், அச்சம் மற்றும் பதற்றம் நீங்கி வாழும் வகையிலும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் நிறைவேற்றியுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான சட்டங்களை திரும்பப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவரது அரசை இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இந்த அரசமைப்புக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்யும் வகையில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.