முக்கிய செய்தி

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
சென்னை, ஜன 07-

சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் என்பது தமிழக மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது என்று திமுக சிறுபான்மையினர் அணி கருத்தரங்கில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியுள்ளார்.
திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் சென்னை ராயப் பேட்டை ஒய்.எம்.சி. மைதானத் தில் நேற்று (06.01-.2021) மாலை  நடைபெற்றது.
இதில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசிய தாவது:-

சிறுபான்மை சமுதாய பிரதிநிதிகள்

இந்தச் சிறப்புமிகு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நாளைய முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தின் சிறுபான்மை சமுதாயப் பிரதிநிதிகள் அனைவரையும் அழகாக ஒன்றுதிரட்டி இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பதன் மூலம் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறந்த அணி இந்த சிறுபான்மை அணி என்று கருதும் நிலையை ஏற்படுத்தி இருக்கிற மஸ்தான், எனக்கு முன் அழகிய உரையைத் தந்து அமர்ந்திருக்கும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட சமுதாய அறிஞர்கள், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், நாங்கள் என்றும் அமைச்சர் என்றே பாராட்டும் எங்கள் திருச்சியைச் சார்ந்த கே என் நேரு, டீ.கே.எஸ்.. இளங்கோவன், அண்ணன் பொன்முடி ஆகியோர் உட்பட திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரமுகர்களும், திறமைவாய்ந்த தொண்டர் பெருமக்களும், குழுமி யிருக்கும் பொதுமக்கள் அனைவரையும் துவக்கமாக வரவேற்று - எனது நன்றியை யும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி

இதுவரை உரையாற்றி யவர்கள் பேசிய அனைத்துக் கருத்துகளையும் தெளி வாகவும், அமைதியாகவும் கேட்டு நல்லதொரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நம் தமிழகத்தில் நல்லாட்சி விரைவில் மலர்ந்திட நாமனைவரும் மனப்பூர்வ மான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற முடிவில் நாம் அனைவரும் இருக்கிறோம்.
முஸ்லிம்களைப் பொருத் தவரை படைத்த இறைவனான அல்லாஹ்வையும், அவனுக்கு அடுத்து இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களையும் மட்டுமே இதயத்தில் ஏற்றி வைத்திருப்பர். அதற்கடுத்து இன்னொருவரை ஏற்றி வைப்பது என்பது அபூர்வமானது. ஆனால் இதயங்களை இணைக்கும் இந்த விழாவில் நான் சொல்லிக் கொள்கிறேன்... தமிழக முஸ்லிம்கள் தங்கள் இதயங்களில் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை ஏற்றி வைத்திருக்கிறார்கள். காரணம் அவர் பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் காட்டித்தந்த வழியில் நடப்பவர்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பு மகன்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்டத் திலிருந்து உழைத்து உழைத்து, பல பொறுப்புகளைக் தாண்டி இன்று இந்தக் தலைமையை அலங்கரித்துக் கொண்டிருப் பவர் என்பனதாம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

திராவிட முன்னேற்றக் கழகம் இந்த சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களுக்கு செய்த நல்ல காரியங்களை இங்கே பேசியவர்கள் அனைவரும் அடுக்கடுக்காகப் பட்டியலிட்டுப் பேசினார்கள். அவை அனைத்துமே நம் சமுதாய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்பதை யாரும் மறுத்து விட முடியாது. சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கும் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான உறவு ஏதோ தேர்தல் நேரத்தில் வந்து செல்லும் தற்காலிக உறவு அல்ல! மாறாக இது கொள்கை ரீதியிலான - பிரிக்க முடியாத பிணைப்பு. """"ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!"", """"பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்""""‘என்பன போன்ற திராவிட பாரம்பரியத்தின் கொள்கை முழக்கங்கள் அனைத்தும் இஸ்லாமிய கொள்கை முழக்கங் களுடன் முழுமையாக ஒத்திருப்பவை. இன்னும் ஒருபடி மேலே சொல்வதானால், கடவுளைக் குறிக்கும் """"அல்லாஹ்"" என்ற சொல் தமிழகத்தில் பிறந்து, பின்னர் அரபுலகத்திற்குச் சென்று, மீண்டும் தமிழகத்திற்கு வந்தது என்பது ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ள முடிவு. அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க இந்த உறவை பட்டுப்போகாமல், கெட்டுப் போகாமல், தழைத்தோங்கும் வகையில் பாதுகாத்திட வேண்டியது நம் அனைவரின் கடமை.

ஜவாஹிருல்லா

இங்கே பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் - காங்கிரஸ் ஆட்சியின்போது அப்துல் மஜீத் அவர்களைத் தமிழகத்தில் அமைச்சராக ஆக்கிய வரலாற்றை எடுத்துக் கூறினார். கடந்த அதிமுக ஆட்சியின்போது நிலோபர் கஃபில் என்ற சகோதரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் நினைத்திருந்தால் அவரை அமைச்சராக்கி இருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதிமுகவின் புதிய அமைச்சரவை அறிவிக்கப் பட்டவுடன் நாங்கள் சென்று கலைஞர் அவர்களைத்தான் சந்தித்தோம். """"இத்தனை பேர் இருக்கும் அமைச்சரவையில் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் இல்லையா?"" என்று அவரிடம்தான் கேட்டோம். கலைஞர் அவர்கள் அதற்கு கூறிய மறுமொழி என்ன தெரியுமா? நீங்கள் கீழே சென்று செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, """"திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்திருந்தால் கண்டிப்பாக அமைச்சரவையில் முஸ்லிம் களுக்கு என்றும் போல் இடம் இருந்திருக்கும் என்று உங்கள் கருத்தாக அல்ல; கலைஞர் இப்படி என்னிடம் சொன்னார் என்றே கூறுங்கள்"" என்று கூறினார். அதை அப்படியே நான் ஊடக நண்பர்கள் முன் வைத்தேன். பின்பு சகோதரி நிலோபர் கஃபில் அமைச்சர் ஆக்கப்பட்டார்.

கலைஞர் ஆட்சியின்போதுஇரு முஸ்லிம் அமைச்சர்கள்

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்த போதெல்லாம் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சராக்கினார். ஒருவரை அல்ல! கடந்த ஆட்சியின் போது டீ.பீ.எம். மைதீன்கான், உபயதுல்லா ஆகிய இருவரை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் கலைஞர் அவர்கள். இதுவரை இருவர். இனி உங்கள் காலத்தில் அது மூவராகவோ, அதற்கு மேலேயோ கூட ஆகலாம். அதற்கான தாராள மனம் உங்களிடம் நிச்சயமாக உண்டு.  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நான்கு முஸ்லிம்களுக்கும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பதினைந்து முஸ்லிம்களுக்கும் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். முஸ்லிம் லீகுக்கு அல்ல! முஸ்லிம் சமுதாயத்திற்காகக் கேட்டேன். தொகுதிகளும் அறிவிக்கப் பட்டன. தளபதி அவர்கள், """"நீங்கள் நான்கு இடங்களைக் கேட்கிறீர்கள்... ஐந்து தந்தால் மறுப்பீர்களா?"" என்று கேட்டு இன்ப அதர்ச்சியைத் பாண்டிச்சேரியையும் சேர்த்து 5 தொகுதிகளைத் தந்தார். தமிழகத்தில் 15 தொகுதிகளில் முஸ்லிம்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் வேண்டும் என்று கேட்டிருக்க, 16 தொகுதிகளைத் தந்தார். ஆக, நாங்கள் கேட்டது குறைவாக இருந்தாலும் அவர்கள் கொடுத்தது நிறைவாகவே இருந்திருக்கிறது. எனவே, வரும் தேர்தலிலும் அதை விடவும் நிறைவாகத் தருவார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. அப்படித் தருவதற்கு - தளபதி அவர்களின் நல்லாட்சி கண்டிப்பாக அமையும்; அமைய வேண்டும். அவர் நோய்நொடிகள் எதுவுமின்றி நீடூழி வாழ வேண்டும் என்று நாங்கள் உளமாரப் பிரார்த்திக்கிறோம். நீங்கள் வாழும் காலம் எல்லாம் எங்களுக்கு நற்காலம்; பொற்காலம்; எங்கள் சிறுபான்மை சமுதாய மக்களுக்கு கிடைப்பதற்கரிய பெரும் பாக்கியம். இதுவே முஸ்லிம் சமுதாய மக்களான எங்களுக்கு உங்கள் மீதுள்ள நம்பிக்கை.

திருச்சியில் ஓய்வில் இருந்தேன்

வரும் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெற்று தளபதி மு க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வருவார் என்று சிறுபான்மை சமுதாய மக்களான முஸ்லிம்களாகிய நாங்கள், ஓ கிறிஸ்தவர்கள் மட்டும் சொல்லிவிடவில்லை. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் திருச்சியிலேயே ஓய்வில் இருந்தேன் அப்போது என்னை சந்திப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரமுகர்களும் பல துறைகளைச் சார்ந்த அதிகாரிகளும் குறிப்பாக உளவுத் துறையினரும் கூட வந்து சென்றார்கள். அப்படி வந்த யாருடைய வாயிலிருந்தும் அடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் தான் என்று வரவே இல்லை.  அப்படி கடந்த வாரம் என்னை சந்திக்க வந்த உளவுத் துறை அதிகாரி ஒருவர் என் பொறுப்பில் 70 தொகுதிகள் கொண்ட 15 மாவட்டங்கள் உள்ளன அங்குள்ள மக்களை சந்தித்து பேசியதில் 7 தொகுதிகளில் மட்டுமே மற்றவர்களுக்கு வாய்ப்புள்ளது என்றும் இதர அனைத்து தொகுதிகளிலும் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் கொடி தான் பறக்கிறது என்றும் இப்படியான நல்ல சூழலை பயன்படுத்தி உங்களுக்கும் அதிகமாக இடங்களை கேளுங்கள் என்றும் கூறினார். வடக்கிலிருந்து வருபவர்களின் சூழ்ச்சிகளில் ஒன்று அது. ஆக வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் தளபதி மு க ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்பது தமிழக மக்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது என்பதை தெரிவிக்கவே இதை நான் இங்கே குறிப்பிட்டு பேசுகிறேன்.

கிராம சபைக் கூட்டங்கள்

தமிழகத்தின் உயிர் துடிப்பு கிராமங்களிலே இருக்கிறது அப்படிப்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டங்களை இந்த தளபதியார் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படி நடத்தும் இடங்களில் எல்லாம் அந்த உயிர் துடிப்பின் வெளிப்பாடு திமுக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்றும் தளபதி மு க ஸ்டாலின் தமிழக முதல்வர் அரியணையில் அமர வேண்டும் என்பது மாகத்தான் இருக்கிறது. ஆக ஒட்டு மொத்த தமிழகத்தின் இந்த உணர்வுகளை ஒருங்கிணைத்து இன்னும் மெருகேற்றி வலிமையாக்கி குறைகள் இடைவெளிகள் எதுவுமின்றி முழுமையாக செயல்வடிவம் கொடுக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது அதை செய்தே தீருவோம் என்ற தெளிவான முடிவோடு நாம் இங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறுபான்மையினர் அணி - இ.யூ.முஸ்லிம் லீக்

பேரறிஞர் அண்ணா அவர்களது காலத்தில் எல்லாக் கட்சிகளிலும் சிறுபான்மை அணி இருக்கின்றனவே திமுகவில் ஏன் இல்லை என்று கேட்கப்பட்டபோது அதற்குத்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எங்களுடன் இருக்கின்றது என்று அண்ணா மறுமொழி பகர்ந்தார். இதை எடுத்துச் சொன்னதற்காக என்னை திமுக பக்தன் கலைஞரின் பித்தன் என்றெல்லாம் கூட விமர்சித்து பேசினார்கள். அதற்காக உண்மையை ஒப்புக் கொள்ள தயக்கம் தேவையில்லை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கும் இடையிலான யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ள முடியாத அன்பு பண்பு பாசம் நேசம் ஆகியன தான் இந்த உறவுக்கு காரணம்.
தமிழகத்தில் கலைஞர் அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு செய்த நன்மைகளை இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்ந்து செய்துகொண்டு இருக் கிறார்களா என்றால் இல்லை. எனவே அவர்களிடத்தில் புதிதாக நாங்கள் எதையும் கேட்டு விட வில்லை மாறாக கலைஞர் அவர்கள் எங்களுக்கு தந்ததை மட்டுமாவது செயல் படுத்துங்கள் என்றுதான் கேட்டிருக்கிறோம்.

உர்து அகாடமி

வாணியம்பாடியைச் சேர்ந்த மலிக்குல் அஜீஸ் எனும் உர்தூ மொழிப் பண்டிதர்; சிறந்த கவிஞர் அண்மையில் இறந்துவிட்டார். தமிழகத்தில் உர்தூ அகடமி அமைக்கப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கலைஞர் அவர்களிடம் பலமுறை நடையாய் நடந்து, அதன் தேவை குறித்து அவருக்கு உணர்த்தி, அவர் வாயாலேயே அறிவிக்கச் செய்து போராடிப் பெற்றுத் தந்தவர் அந்தக் கவிஞர்தான். ஆனால் அந்த உர்து அகடமி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது மீண்டும் அதை பெற்றிட நடையாய் நடந்து அவரது கால்கள் கடுத்துதான் மிச்சம் இத்தனைக்குப் பிறகும் இன்றுவரை அதற்குச் செவி சாய்க்காத அரசுதான் இன்றைய அரசு. நலிவுற்ற நிலையில் இருக்கும் உர்தூ மொழியின் வளர்ச்சிக்காக கலைஞரால் தரப்பட்ட அகடமியைப் பல்லாண்டு காலமாக கிடப்பில் போட்டு, தவிடுபொடியாக்கிய பெருமை இன்றைய ஆளும் அரசுக்கு உண்டு.

சுயநிதி பள்ளிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை தாம்பரத்தில் நாங்கள் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த கலைஞர் அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தோம். தமிழகத்தில் சிறுபான்மை யினரும், பெரும்பான்மை யினர் என அனைத்து சமுதாயத்தினரும் நடத்தி வரும் சுயநிதிப் பள்ளிகள் 247 உள்ளன. அவை அனைத்தையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக அறிவிக்க வேண்டும் என்பதே எங்களது அந்தக் கோரிக்கை. அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு - அதற்கான உத்தரவை வெளியிட்டதோடு, அதற்கென தனி பட்ஜெட் நிதியையும் ஒதுக்கி அறிவித்தார் கலைஞர் அவர்கள். ஆனால் இன்று ஆளும் அரசு அனைத்து சமுதாய மக்களும் நடத்தும் சுயநிதிப் பள்ளிகளுக்கு விடிவு காலத்தைத் தரக்கூடிய அந்த அற்புதமான அறிவிப்பு அடங்கிய உத்தரவை அப்படியே கிடப்பில் போட்டு, காலுக்குக் கீழ் வைத்திருக்கிறது.

ஆக, கலைஞர் அவர்கள் சிறுபான்மை சமுதாய மக்களுக்கு அள்ளித்தந்த திட்டங்களை ஒருபுறம் அடுக்கிக் கொண்டே செல்ல லாம் என்றால், அவை அனைத்தையும் இன்று ஆளும் அரசு கிடப்பில் போட்டுள்ள பட்டியலையும் அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆக, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் - உணர்வுகளுக்கும் சிறிதும் மதிப்பளிக்காத ஆளும் இந்த அரசால் கிடப்பில் போடப்பட்ட - மக்கள் நலனுக்கான பல்வேறு சட்டங்களும், திட்டங்களும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்து, தளபதியார் அவர்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் கலைஞரைப் போலவே நடைமுறைப்படுத்தப்படும் என்ற அழுத்தமான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும்
மத்திய பா.ஜ.க. அரசு

மாநிலத்தில் இப்படி என்றால், மத்தியில் ஆளும் அரசோ மக்களின் உணர்வுகளுக்குக் கடுகளவு கூட மதிப்பளிக்காமல் தான்தோன்றித் தனமாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மை மக்களின் உரிமைகளை முற்றிலுமாக இல்லாமல் ஆக்கவும், அவர்களுக்கு எதிராக தவறான முறையில் ஆதிக்கம் செலுத்தவும் வெறியோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, கவ்ரக்ஷா - அதாவது பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்தியா முழுக்கவும் 247 பேரைக் கொன்றொழித்தார்கள். அவர்களுள் 232 பேர் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள். இதைச் செய்வதன் மூலம் கவ்ரக்ஷா என்ற பெயரில் இருந்த தொண்டர்கள் கவ்ராக்ஷஷா என்று சொல்லும் அளவில் வெறி பிடித்தவர்களாக நடந்திருக்கிறார்கள். இது குறித்து ஆளும் மத்திய அரசிடம் நாடு முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்கள் முறையிட்டும் கூட - அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்றளவும் இருக்கிறது.

லவ் ஜிஹாத்

அதுபோல, பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் - குறிப்பாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்கள் இந்து பெண்களை திட்டமிட்டுத் திருமணம் செய்து, முஸ்லிம் மக்களைப் பெருக்குவதற்கு முயற்சிப்பதாகத் தவறான பரப்புரையை மக்களிடையே திட்டமிட்டு பரப்பி, முஸ்லிம்கள் மீது இதர மக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தி, """"அப்படியான இந்தத் திட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்காக நாங்கள் சட்டம் இயற்றுகிறோம்"""" என அவசர அவசரமாக சில பல சட்டங்களையும் இயற்றி, அவற்றின் மூலம் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கைது செய்து, அவர்களின் வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டங்களைக் கொண்டு அவர்கள் வெறுமனே மணமகன்களான ஆண்களை மட்டும் கைது செய்யவில்லை. மாறாக மணமகள்களாக இருந்த பெண்களையும், திரு மணத்திற்கு வந்த - திருமணத்தை ஏற்பாடு களைச் செய்த உறவினர் களையும், நண்பர் களையும், ஊர் மக்களையும், அத்திருமணங்களை நடத்தி வைத்த காஜிகளையும் கைது செய்து காராக்கிரகத்தில் அடைத்து வைத்து அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

""""அப்படி இந்த உத்தரப் பிரதேசத்தில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் எந்த முஸ்லிம் ஆண்களாவது இந்துப் பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்ய முயற்சித்தால், """"ராம் நாம் சத்ஹே"" என்ற முழக்கத்தோடு அவர்களுக்குப் பாடை கட்டுவோம் என்று அம்மாநிலத்தின் யாரோ சொல்லவில்லை... ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் உத்தரபிரதேச முதல்வர் வெளிப் படையாகவே சொல்லி இருக்கிறார். சென்ற மாதம் ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தியைப் படித்த யாரும் திடுக்கிட்டு இருப்பார்கள். லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்கள் யாராவது அப்படித் திருமணம் செய்ய முயற்சித்தால், ஏற்கனவே இறந்து அடக்கம் செய்யப்பட்ட நூறு முஸ்லிம் பெண்களின் உடல்களைத் தோண்டி எடுத்து அவர்களைக் கற்பழிக்க வேண்டும் என்று ஆவேசத்தோடு பேசியிருக்கிறார் சந்நியாசி வேடம் தரித்த உத்தரபிரதேச முதல்வர் யோகி. இப்படியான கொடுமையான ஆட்சி மத்தியிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தக் கொடுங்கோல் ஆட்சியைத்தான் தமிழகத் திலும் கொண்டு வர வேண்டு மென துடியாய்த் துடித்துக் கொண்டும் இருக்கின்றனர்.

இறைச்சிகளில் ஹலால் சான்று முத்திரை

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடு, மாடு, ஒட்டகங்களின் இறைச்சிகளில் ஹலால் என்று சான்று முத்திரை கொடுக்கப்பட்டிருக்கும். அந்தச் சான்று இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை செய்தியாக வெளி யிட்டுள்ளது. """"முஸ்லிம்களின் முறையில் அறுத்து இறைச்சி ஆக்கப்பட்டதை நாங்கள் எப்படி சாப்பிடுவது?"" என்று இந்துத் துறவிகளும், சீக்கியர்களும் எதிர்க்குரல் எழுப்பியதே இந்தச் சான்று முத்திரையை நீக்கக் காரணமாயிற்று என்று அதற்குக் காரணமும் கூறப்பட்டிருக்கிறது.

இப்படி அடுக்கடுக்காகக் கொடுமைகளைச் செய்து கொண்டு, மக்களின் உணர்வுகளை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சியையும், அதற்கு உறுதுணை செய்து கொண்டிருக்கும் தமிழக மாநில ஆட்சியையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டுமானால் - அதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு செயல், இவ்வாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த மதவெறி சக்திகளை இங்கு சிறிதளவு கூட வேரூன்ற விடாமல் பாதுகாக்க வேண்டியதுதான் என்பதை உணர்ந்து, அனைவரும் ஒன்றுபட்டு, ஆர்வத்தோடும், உற்சாகமாகவும் உழைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு உளமார பாடுபடுவோம். தளபதி மு க ஸ்டாலின் அவர்களை தமிழக முதல்வர் அரியணையில் அமர்த்தி அழகு பார்ப்போம். தமிழக மக்களுக்கு அவரும் அவர் தந்தையைப் போலவே எண்ணிலடங்காத நலத் திட்டங்களை வழங்கி அழகு பார்ப்பார் என்று தெரிவித்து, இந்த நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன்.